பெய்ஜிங், 31 ஜூலை 2026 : அணுக்கரு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தின் மூலம் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் தனது ‘செயற்கை சூரியன்’ (Artificial Sun) திட்டத்தில் சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய 582 டன் எடையுள்ள சூப்பர் கண்டக்டிங் (Superconducting) காந்தம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 21 மீட்டர் நீளமுடைய இந்த காந்தம், 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமடையும் பிளாஸ்மாவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.
இந்த புதிய தொழில்நுட்பம், சூரியனில் நடைபெறும் அணுக்கரு இணைவு செயல்முறையை பூமியிலேயே உருவாக்கி, பாதுகாப்பான, கார்பன் வெளியீடு இல்லாத மற்றும் நீடித்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் பாரம்பரிய எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சீனாவின் ‘செயற்கை சூரியன்’ திட்டத்தின் அடுத்த கட்டமாக, அணுக்கரு இணைவின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை 2030ஆம் ஆண்டளவில் நிரூபிக்கும் இலக்கை அந்நாடு நிர்ணயித்துள்ளது. இந்த முன்னேற்றம், உலகளவில் தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி உற்பத்திக்கான ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.






