30 ஜூலை 2026 : உரிமம் பெற்ற சில பணக் கடன் வழங்குநர்கள் மற்றும் சட்டவிரோத ‘அலோங்’ கடன் வட்டாரங்களின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, தேசிய நேர்மை மற்றும் நட்புறவு நல அமைப்பு (PKIPN) இன்று வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) மற்றும் மலேசிய அரச காவல்துறை (PDRM) ஆகியவற்றிடம் அதிகாரப்பூர்வ மனுவை சமர்ப்பித்தது.
புத்ராஜெயாவில் உள்ள KPKT அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மனு சமர்ப்பிப்பு நிகழ்வில், அமைப்பின் நிறுவனர் ஜோசப் பிரகாஷ் மற்றும் செயல்பாட்டு மேலாளர் சக்கரியா ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
மனுவில், சில உரிமம் பெற்ற பணக் கடன் வழங்குநர்கள் அதிகப்படியான மற்றும் இரட்டை வட்டி விதிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், கடன் பெற்றவர்களை வீடுகள் அல்லது பிற சொத்துகளை ஒப்படைக்க நிர்பந்திப்பதாகக் கூறப்படும் செயல்பாடுகள், மேலும் ஜொகூர்–சிங்கப்பூர் இடையே பணிபுரியும் மலேசியர்களை குறிவைத்து செயல்படும் சட்டவிரோத ‘அலோங்’ வட்டாரங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை குறித்து சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று PKIPN வலியுறுத்தியுள்ளது.
அனைத்து உரிமம் பெற்ற பணக் கடன் வழங்குநர்களையும் தாங்கள் குற்றம்சாட்டவில்லை என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்புகள் மீது மட்டுமே சட்டப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், பணக் கடன் வழங்கும் துறையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தை அரசு வலுப்படுத்த வேண்டும் என்றும் PKIPN தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.






