புத்ராஜெயா, 30 ஜூலை 2026 : மலேசியா–பிலிப்பைன்ஸ் இடையிலான தொழிலாளர் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிலிப்பைன்ஸ் புலம்பெயர் தொழிலாளர் அமைச்சர் ஹான்ஸ் லியோ ஜே. காக்டாக் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகளை புத்ராஜெயாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், தொழிலாளர் ஆளுமை முறையை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தொழிலாளர் துறையில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும், “அபுதாபி உரையாடல்” (Abu Dhabi Dialogue) அமைப்பின் தலைவராக பிலிப்பைன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அமைச்சர் தெரிவித்ததுடன், அடுத்த உரையாடலில் பங்கேற்குமாறு டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பையும் விடுத்தார். இந்த சர்வதேச உரையாடலில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு, திறந்த உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டு அர்ப்பணிப்பின் மூலம் மேலும் வலுப்பெற்று, நிலையான, முன்னேற்றமிக்க மற்றும் போட்டித்திறன் கொண்ட தொழிலாளர் சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை ரமணன் ராமகிருஷ்ணன் வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பில் மலேசியாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் மரியா அஞ்சலா ஏ. பொன்சே, பிலிப்பைன்ஸ் புலம்பெயர் தொழிலாளர் அமைச்சின் துணைச் செயலாளர் ஜைனல் டி. ரசுல் ஜூனியர், மலேசியாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் ரௌசெல் ஆர். ரெயஸ், தொழிலாளர் இணைப்பாளர் ஜோசலின் ஒர்டேகா, உதவி தொழிலாளர் இணைப்பாளர் ஒலிவா பி. மகாவிலி, மனிதவள அமைச்சின் (KESUMA) கொள்கை மற்றும் சர்வதேச பிரிவு துணைச் செயலாளர் டாக்டர் ஹாஜி முகமது ஷஹாரின் உமர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






