புத்ராஜெயா, 29 ஜூலை 2026 : மலேசியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான தொழிலாளர் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அரிஃபுல் ஹக் சௌதுரி மற்றும் அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் டாக்டர் மஹ்தி அமீன் ஆகியோர் புத்ராஜெயாவில் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை, குறிப்பாக தொழிலாளர் மேலாண்மையை ஒழுங்குபடுத்தப்பட்ட, வெளிப்படையான மற்றும் தொழிலாளர் நலன் மையப்படுத்திய அணுகுமுறையில் மேம்படுத்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக ரமணன் தெரிவித்தார்.
சந்திப்பின் போது தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மேம்படுத்துதல், மலேசியாவில் பணிபுரியும் பங்களாதேஷ் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை வலுப்படுத்துதல், தொழிலாளர் இடம்பெயர்வு செயல்முறையை நெறிமுறை, திறன் மற்றும் நிலைத்தன்மையுடன் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மலேசியாவில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரும் சட்டத்தின் பாதுகாப்பைப் பெற்று, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான பணிச்சூழலில் பணியாற்றுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசியா–பங்களாதேஷ் இடையிலான நெருக்கமான உறவு தொடர்ந்து வலுப்பெறுவது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் முன்னேற்றமான மற்றும் நிலையான தொழிலாளர் சூழலை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.






