பெட்டாலிங் ஜெயா, 26 அக்டோபர் 2026 : மலேசியாவில் நடைபெற்ற AI Muda@NADI ஹேக்கத்தான் 2026 போட்டியில், நாடு முழுவதும் உள்ள 9,000க்கும் மேற்பட்ட இடைநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துறைகளுக்கான AI தீர்வுகளை உருவாக்குவது இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
ஜோகூர் பாருவில் உள்ள கோலேஜ் வொகேஷனல் பெர்டாகங்கானைச் சேர்ந்த INNOVIQ குழு முதலிடத்தைப் பிடித்தது. அக்குழு உருவாக்கிய ‘TerraScan’ AI செயலி, மண்ணின் தன்மையை ஆய்வு செய்தல், பயிர்களுக்குப் பரிந்துரைகள் வழங்குதல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் விவசாய நிதி மேலாண்மை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
முதலிடம் பெற்ற குழுவுக்கு RM5,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்துக்கு RM2,000, மூன்றாம் இடத்துக்கு RM1,000 வழங்கப்பட்டன.


மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), செல்காம்டிஜியுடன் இணைந்து தேசிய தகவல் பரவல் மையங்கள் (NADI) வழியாக இத்திட்டத்தை நடத்தியது. இதன் கீழ் மாணவர்கள் AI பயன்பாடு, கேள்விகளைத் திறம்பட வடிவமைத்தல் மற்றும் பொறுப்பான AI பயன்பாடு உள்ளிட்ட ஆறு இணையவழிப் பயிற்சிப் பாடங்களில் பங்கேற்றனர்.
இறுதிச் சுற்றுக்கு 26 மாணவர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் AI திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடம் மற்றும் Google for Education ஆகியவையும் இத்திட்டத்தில் இணைந்தன. இந்தத் திட்டத்தை உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில்முறை நிபுணர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







