27 ஜூலை 2026 : உக்ரைன் போருக்கு ஆதரவாக மேலும் 30,000 வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெலன்ஸ்கியின் கூற்றுப்படி, கடந்த ஜூன் மாதம் முதல் ரஷ்யாவின் வொரோனெஷ் (Voronezh) பகுதியில் வடகொரிய வீரர்களை வரவேற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடகொரியா ரஷ்யாவுக்கு கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களையும் வழங்கத் தயாராகி வருவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்த ராணுவ ஒத்துழைப்பு, வடகொரியாவுக்கு நவீன போர்க்கள அனுபவத்தையும் ஆயுதத் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வழங்குவதால், அது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் வடகொரியா இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் அண்மைக் காலமாக மேலும் வலுப்பெற்று வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், ரஷ்யா இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.






