சென்னை, 09 செப்டம்பர் 2026 : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அமரன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரமாண்டமான படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டு, முக்கிய ஆக்ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் படப்பிடிப்பில் சீமான் விரைவில் இணைய உள்ளார்.







