கோலாலம்பூர், 26 ஜூலை 2026 : நாடு முழுவதும் உள்ள ஃபெல்டா குடியிருப்புப் பகுதிகளில் இரண்டாம் தலைமுறையினருக்கான வீடமைப்புத் திட்டக் கொள்கை ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகள் நிறைவு காணும் ஃபெல்டாவை முன்னிட்டு நடைபெற்ற ‘Santai Perantau’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரண்டாம் தலைமுறையினரின் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான சிக்கல்களும் தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார். மின்சார இணைப்பை உடனடியாக வழங்குமாறு தேசிய மின்சார நிறுவனமான TNB-க்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் மாநில அரசுகளின் பொறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாநில அரசுகளுக்கு நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், கூட்டாட்சி அரசு தேவையான நிதி உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை அமைச்சர்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கொள்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.






