26 ஜூலை 2026 : கணிதத் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘பீல்ட்ஸ் மெடல்’ (Fields Medal) விருதை, நூற்றாண்டுக்கும் மேலாக கணிதவியலாளர்களை சவாலுக்குள்ளாக்கிய சிக்கலான கணிதப் புதிர்களுக்கு தீர்வு கண்டதற்காக சீனாவைச் சேர்ந்த கணிதவியலாளர்கள் ஹாங் வாங் மற்றும் யூ டெங் ஆகியோர் வென்றுள்ளனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர் மாநாட்டில் (International Congress of Mathematicians) இந்த விருது வழங்கப்பட்டது. சீன நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர்கள் முதல் முறையாக இந்த உயரிய விருதைப் பெறுவது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஹாங் வாங், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த ‘ககேயா யூகக் கோட்பாடு’ (Kakeya Conjecture) தொடர்பான முக்கிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்காக விருது பெற்றார். அதேவேளை, சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரான யூ டெங், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் 1900-ஆம் ஆண்டு முன்வைத்த புகழ்பெற்ற 23 கணிதப் பிரச்சினைகளில் ஒன்றுடன் தொடர்புடைய வாயு இயக்கவியல் சமன்பாடுகள் குறித்த ஆய்வில் புரட்சிகர முன்னேற்றத்தை ஏற்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டார்.
35 வயதான ஹாங் வாங், பீல்ட்ஸ் மெடல் வரலாற்றில் இந்த விருதைப் பெறும் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 40 வயதிற்குட்பட்ட சிறந்த கணிதவியலாளர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.






