என் தமிழ்

பொருளாதார கணக்கெடுப்பு 2026 : சிலாங்கூர் அரசும் DOSM-மும் இணைந்து செயல்பட முடிவு

ஷா ஆலம், 22 ஜூலை 2026 : சிலாங்கூர் மாநிலத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பை (Economic Census 2026) வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக, மலேசிய புள்ளிவிபரத் துறையின் (DOSM) சிலாங்கூர் மாநில இயக்குநர் புவான் சித்தி சக்கியா முகமட் ஈசா தலைமையிலான உயரதிகாரிகள் குழு மரியாதை நிமித்தமாக சந்திப்பு மேற்கொண்டது.

இந்தச் சந்திப்பின் போது, சிலாங்கூர் மாநில அரசும் மலேசிய புள்ளிவிபரத் துறையும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொருளாதார கணக்கெடுப்பின் பரவலான செயல்பாட்டையும், அனைத்து துறைகளின் அதிகபட்ச பங்கேற்பையும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மேலும், வழிபாட்டுத் தல நிர்வாகக் குழுக்கள், இலாப நோக்கமற்ற அமைப்புகள் (NPI), சங்கங்கள், நலவாழ்வு கழகங்கள் மற்றும் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் துல்லியமான, தரமான மற்றும் மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்குப் பயனளிக்கும் தரவுகளைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நெருக்கமான ஒத்துழைப்பு, பொருளாதார கணக்கெடுப்பு 2026-ஐ வெற்றிகரமாக செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிலாங்கூர் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் திறன்மிக்க கொள்கை வடிவமைப்புகளுக்கான உறுதியான அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top