என் தமிழ்

சுங்கை பெட்டானியில் உலக யோகா தினக் கார்னிவல் 2026 : பள்ளி மாணவர்களுக்கு இலவச பங்கேற்பு

கெடா, 20 ஜூலை 2026 : கெடா மாநிலம் சுங்கை பெட்டானி யோகா விளையாட்டுக் கழகம் (Kelab Sukan Yoga Sungai Petani) சார்பில், 2026ஆம் ஆண்டுக்கான உலக யோகா தினக் கார்னிவல் வரும் ஜூலை 25ஆம் தேதி (சனிக்கிழமை) சுங்கை பெட்டானி ஸ்ரீ சுவாமி சுப்பிரமணிய தேவஸ்தான ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 7.40 மணி முதல் பதிவேட்டுப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், காலை 8.00 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். தொடக்க மந்திரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகி, கழகத்தின் தலைவர் டாக்டர் அமுதா கெவரப்பன் வரவேற்புரையாற்றவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து AYFM மாணவர்களின் சிறப்பு யோகா நிகழ்ச்சி, டாக்டர் அமுதா கெவரப்பன் தலைமையிலான யோகா பயிற்சி, ‘மேஜிக் யோகா பவுல்’ செயல்பாடு, யோகா மிக்ஸ் அண்ட் மேட்ச் புதிர் போட்டி, உற்ஷிதா கோபி மற்றும் பரிக்ஷா கோபியின் யோகா நிகழ்ச்சி, சுபிக்ஷா கோபியின் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்பாக செயல்படும் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ், இலகு காலை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.

இந்த உலக யோகா தினக் கர்னிவல், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதுடன், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு PAJSK தகுதி மதிப்பெண்களும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் ஆன்மிக சமநிலையை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்வில், அஷ்டாங்க யோகா மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு யோகாவின் மகத்துவத்தை கொண்டாடுமாறு டாக்டர் அமுதா கெவரப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.

Scroll to Top