என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் நடத்திய 48-வது திருமுறை ஒப்பித்தல் விழா : 125 மாணவர்கள் பங்கேற்பு

பினாங்கு, 20 ஜூலை 2026 : மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் பெந்தேரா வட்டார மன்றம் ஏற்பாடு செய்திருந்த 48-வது திருமுறை ஒப்பித்தல் விழா, பினாங்கு கெபூன் பூங்காவில் அமைந்துள்ள ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 125 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, திருமுறைகளை ஒப்பித்து சைவ சமய பாரம்பரியத்தையும் தமிழர் ஆன்மிக மரபையும் சிறப்பித்தனர்.

நிறைவு விழாவிற்கு மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் தலைமையேற்றார். துணைத் தலைவர் விவேக ரத்னா சத்தியசீலன் சுப்பிரமணியம், கௌரவ செயலாளர் விவேக ரத்னா சசிரேகா பாலா, உதவிச் செயலாளர் கங்காய்நேஷ் சீவா, புக்கிட் பெந்தேரா வட்டார மன்றத் தலைவர் விவேக ரத்னா சங்கிரிதா கோபிநாதன், விழா அமைப்புக் குழுத் தலைவர் பி. ஹரிதாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய விவேக ரத்னா தர்மன் ஆனந்தன், பள்ளி நேரத்திலேயே சமயக் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சமயக் கல்வி வகுப்புகளில் தவறாமல் பங்கேற்கச் செய்வது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த புக்கிட் பெந்தேரா வட்டார மன்ற நிர்வாகிகள், ஆலய நிர்வாகம், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோருக்கு மலேசிய இந்து சங்கம் பாராட்டு தெரிவித்தது. திருமுறை விழா, இளம் தலைமுறையினரிடையே சைவ சமயப் பாரம்பரியத்தையும் தமிழ் ஆன்மிக இலக்கிய மரபையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

Scroll to Top