என் தமிழ்

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி – மலேசிய அணிக்கு ஜாலூர் ஜெமிலாங் கொடியை வழங்கிய அமைச்சர்

18 ஜூலை 2026 : 2026ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான மலேசிய அணிக்கு அந்நாட்டின் தேசியக் கொடியான ஜாலூர் ஜெமிலாங் இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய விளையாட்டு மன்றத்தின் (MSN) Casa 4 விருந்து மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி மலேசிய அணியிடம் தேசியக் கொடியை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் துவான் மோர்டி பிமோல், அமைச்சகத்தின் செயலாளர் ஜெனரல் டத்தோ ரஹிமி இஸ்மாயில், மலேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது நொர்சா சக்காரியா, மலேசிய பாராலிம்பிக் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ மெகாட் டி. ஷஹ்ரிமான் மற்றும் தேசிய விளையாட்டு மன்றத்தின் இயக்குநர் ஜெனரல் ஜெப்ரி நகதிரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீண்ட தூர ஓட்ட வீரரான டத்தோ அப்துல் லத்தீப் ரொம்லி தேசியக் கொடியை ஏந்தும் பெருமையை பெற்றார். அதேவேளை, மைதான விளையாட்டு வீராங்கனை எம்மா ஃபிரியானா சரோஜி, கிங்’ஸ் பேட்டன் (King’s Baton) ஏந்துபவராக தேர்வு செய்யப்பட்டார். மலேசிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ரேச்சல் யியோ லி வென், மலேசிய அணியின் சார்பில் உறுதிமொழியை வாசித்தார்.

இப்போட்டியில் மலேசியா சார்பில் 37 திறன் விளையாட்டு வீரர்கள் மற்றும் 22 பாரா விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 59 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். எட்டு விளையாட்டுப் பிரிவுகளில் 64 போட்டிகளில் பங்கேற்கும் மலேசிய அணி, 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரை நடைபெற உள்ளது.

Scroll to Top