என் தமிழ்

நெகிரி செம்பிலானில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் யுனேஸ்வரன்

செரம்பான், 18 ஜூலை 2026 : நெகிரி செம்பிலான் மாநில ருக்குன் தெத்தாங்கா (KRT) அமைப்புகளுடனான நல்லுறவுச் சந்திப்பு நிகழ்வை தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், செரம்பானில் உள்ள தாமான் ஸ்ரீ புலாய் 3 சமூக மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

சமூக அமைதி, பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில், ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் தளமாக இந்நிகழ்வு அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 342 ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளுக்கு சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கூடுதலாக RM342,000 நிதி வழங்கியதையும் யுனேஸ்வரன் பாராட்டினார்.

இதன் போது, நவீன சீருடைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் அமைக்கப்பட்ட ஆர்.டி. புரோகிரசிஃப் (RT Progresif) தன்னார்வ பாதுகாப்பு (SRS) கேபினை அவர் திறந்து வைத்தார். மேலும், சமூக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட திலாப்பியா மீன் வளர்ப்புத் திட்டத்தையும், இளைஞர்கள் ஆரோக்கியமான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்ட புட்சால் மைதானத்தையும் திறந்து வைத்தார்.

தாமான் ஸ்ரீ புலாய் 3 ருக்குன் தெத்தாங்கா அமைப்பின் இந்த முயற்சிகள், நாடு முழுவதும் உள்ள மற்ற ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் சார்பில் டத்தோ முகமட் நஸ்ரி காசிம், மாநில காவல்துறைத் தலைவர் சார்பில் டிஎஸ்பி சைபுல் லிசான் சுலைமான், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் (JPNIN) தலைமை இயக்குநர் சுல்கிப்லி ஹாஷிம், நெகிரி செம்பிலான் JPNIN இயக்குநர் மார்லினா தெர்முடி மற்றும் தாமான் ஸ்ரீ புலாய் 3 ருக்குன் தெத்தாங்கா தலைவர் முகமட் ஃபாரூக் ஓமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமூக மட்டத்தில் நிலவும் உறுதியான ஒற்றுமையே நாட்டின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான வளர்ச்சிக்கான அடித்தளமாகும் என வலியுறுத்திய யுனேஸ்வரன், மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஒத்துழைப்பு முயற்சிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த, அமைதியான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Scroll to Top