சிலாங்கூர், 15 ஜூலை 2026 : சர்வதேச யோகா தினம் 2026-ஐ தொடர்ந்து, கோபியோ மலேசியா, இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாசார மையம் ஆகியவை இணைந்து சிலாங்கூரிலுள்ள இரு தமிழ்ப்பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தின.
ஜூலை 8ஆம் தேதி எஸ்.ஜே.கே.(த) புக்கிட் இஜோக், சுங்கை பெலேக் பள்ளியில் 64 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஜூலை 9ஆம் தேதி எஸ்.ஜே.கே.(த) தெலுக் மெர்பாவ், தஞ்சோங் செப்பாட் பள்ளியில் 164 மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சமாக, இரு பள்ளிகளிலும் யோகா மன்றங்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களிடையே உடல் நலம், மனநலம் மற்றும் யோகாவின் பாரம்பரிய மதிப்புகளை வளர்க்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இளம் தலைமுறையினரிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், யோகாவின் பயன்களைப் பரப்பும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.








