14 ஜூலை 2026 : மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள், எல்லைப் பகுதிகளில் துறைமுக வசதிகள் மற்றும் தளவாட (லாஜிஸ்டிக்ஸ்) சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளின் பிரதமர்கள் நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எல்லை வழியாக சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துதல், சுங்க மற்றும் குடிநுழைவு நடைமுறைகளை எளிமையாக்குதல், துறைமுக இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கூடுதல் ஊக்கமளித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகத்தை 2027ஆம் ஆண்டுக்குள் 3000 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை எட்டும் வகையில் போக்குவரத்து மற்றும் எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் தீவிரப்படுத்த இரு தரப்பும் உறுதியளித்தன.
இந்த ஒத்துழைப்பின் மூலம் எல்லைப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய வர்த்தக இணைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






