என் தமிழ்

ஜோகூர் தேர்தல் களம் : கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்கிய லிம் கிட் சியாங்

ஸ்கூடாய், 09 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மலேசியாவின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங், ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நீண்ட அரசியல் பயணமும், பல்வேறு போராட்டங்களும் மூலம் மலேசிய அரசியலில் முக்கிய இடம்பிடித்துள்ள லிம் கிட் சியாங்கின் இந்தப் பிரச்சாரப் பங்கேற்பு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லிம் கிட் சியாங் தனது சிறு வயது முதல் தனக்கு உந்துசக்தியாக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட கார்த்தியாயினி ஜெயபாலன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.

“நீங்கள் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்கள். அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். நான் சிறுமியாக இருந்தபோது, என் தந்தை என்னை உங்கள் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். ஒரே நாளில் மூன்று பொதுக் கூட்டங்கள் நடந்தாலும், அவற்றில் அனைத்திலும் தவறாமல் பங்கேற்போம்,” என்று அவர் கூறினார்.

மேலும், லிம் கிட் சியாங்கின் போராட்டங்களையும், அவர் முன்னிறுத்திய கொள்கைகளையும் பார்த்து வளர்ந்ததாகக் கூறிய கார்த்தியாயினி, இன்று அவருடன் இணைந்து மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனது கனவு நனவான தருணம் என்றும் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங் உருவாக்கிய உயரிய இலட்சியங்களையும், தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் செயல்படுவேன் என்றும் கார்த்தியாயினி ஜெயபாலன் கூறினார்.

Scroll to Top