ஜோகூர், 09 ஜூலை 2026 : சிகிச்சைக்காக ஒரு நாள் ஓய்வெடுத்த பிறகு, பலோ சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் களமிறங்கியதாக அந்தத் தொகுதியின் வேட்பாளர் டாக்டர் ரூபன் தெரிவித்துள்ளார். அவர், மூத்த அரசியல்வாதி தான் ஸ்ரீ லிம் கிட் சியாங், ஷேக் ஒமர் அலி, ஆர்.எஸ்.என். ராயர் மற்றும் கஸ்தூரி பட்டோ ஆகியோருடன் இணைந்து பலோவில் உள்ள ஒரு கோப்பிட்டியத்தில் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்தச் சந்திப்புக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு கிடைத்ததாகவும், நேரில் வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததற்கும், உற்சாகம் அளித்ததற்கும், ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரம் இன்னும் நிறைவடையவில்லை என்றும், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை பலோ தொகுதியின் வீடு வீடாகச் சென்று, அதிகமான மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பலோ பொதுச் சந்தை வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பான் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார். பலோவின் முன்னேற்றத்திற்காக மாற்றத்தையும், மக்களோடு எப்போதும் இணைந்து செயல்படும் தலைமைத்துவத்தையும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.






