என் தமிழ்

புடவையணிந்த பெண்களுக்கான மெர்டேக்கா நடைப்பயணம் : ஆகஸ்ட் 2-இல் ஷா ஆலமில் பிரம்மாண்ட ஏற்பாடு

ஷா ஆலம், 09 ஜூலை 2026 : மலேசியா பெல் தமிழர் கழகம் (Kelab Bell Tamil Malaysia) ஏற்பாட்டில், அனைத்து இனப் பெண்களும் பங்கேற்கும் வகையில் “மெர்டேக்கா தொண்டு நடைப்பயணம் – புடவையில் பெண்கள் நடைப்பயணம்” (Walkathon for Ladies in Saree) ஆகஸ்ட் 2ஆம் தேதி ஷா ஆலமில் நடைபெறவுள்ளது.

ஷா ஆலம், செக்‌ஷன் 17-இல் உள்ள JKR விளையாட்டு அரங்கில் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், 2 கிலோமீட்டர் மற்றும் 4 கிலோமீட்டர் தொலைவுகளில் நடைப்பயணம் நடைபெறும்.

18 முதல் 35 வயது, 36 முதல் 55 வயது மற்றும் 56 முதல் 75 வயது என மூன்று வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் 100 பேராக பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் உடல் நிறை குறியீடு (BMI) பரிசோதனை, யோகா மற்றும் ஜும்பா உள்ளிட்ட உடல்நல நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. தமிழர் பாரம்பரிய உடையான புடவையை அனைத்து தரப்பினரிடமும் அறிமுகப்படுத்துவதோடு, சமூக ஒற்றுமை மற்றும் தொண்டு உணர்வை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்கேற்க விரும்புவோர் ஜூலை 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பதிவு கட்டணம் ஒருவருக்கு RM25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top