இந்தி மொழி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அம்மொழியை திணிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் பல்கலைகழகத்தில் இந்தியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைகழகம், அழகப்பா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, பட்டப்படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தியை அறிமுகப்படுத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக பல்கலைகழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அறவே பொருந்தாது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள முதல்வர், தமிழ் பல்கலைகழகங்களில் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாக தொடரும் என உறுதிபட கூறியுள்ளார். ஆங்கிலம் 2ம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் 3ம் பகுதியாகவும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அரசின் பல்கலைகழகஙகளுக்கு அறிவுரை வழங்கவும் தலைமைச் செயலருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.