என் தமிழ்

செமென்யிஹ் மயானத் திட்டம் : 9.39 கோடி ரிங்கிட் உள்கட்டமைப்புச் செலவை முழுமையாக ஏற்கும் மேம்பாட்டாளர்

கோலாலம்பூர், 09 ஜூலை 2026 : செமென்யிஹ் பகுதியில் அமைக்கப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மயானத் திட்டத்தின் உள்கட்டமைப்புச் செலவான 9 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டை அரசாங்கம் அல்ல, திட்டத்தை மேற்கொள்ளும் மேம்பாட்டாளர் முழுமையாக ஏற்கவுள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு விளக்கமளித்த அவர், இந்தத் திட்டம் 2005ஆம் ஆண்டு முதலே திட்டமிடப்பட்டதாகவும், கோலாலம்பூரில் இஸ்லாமிய மயானங்களின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இது செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

332.6 ஏக்கர் பரப்பளவில் கூட்டரசு நிலத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 4 ஆயிரத்து 470 கல்லறை இடங்கள், தொழுகை மண்டபம், நிர்வாக அலுவலகம், சிற்றுண்டிச்சாலை, கழிப்பறைகள், பாதுகாப்பு மையம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் மேம்பாட்டாளர் அமைத்துக் கொடுக்கவுள்ளார்.

மேலும், சுங்கை லாலாங் சாலையையும் சில்க் விரைவுச்சாலையையும் இணைக்கும் 4.3 கிலோமீட்டர் மாற்றுப் பாதை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்படுவதாகவும், அதன் கட்டுமானச் செலவும் மேம்பாட்டாளராலேயே ஏற்கப்படும் என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார்.

Scroll to Top