புத்ராஜெயா, 08 ஜூலை 2026 : அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயதை தற்போதைக்கு உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்ந்து 60 ஆண்டுகளாகவே நீடிக்கும்.
அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மதானி அரசின் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக தற்போது எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் விளக்கினார்.
இதனிடையே, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்திற்கான 0.75 விழுக்காடு பங்களிப்பு இனி கட்டாயமாக இருக்காது என்றும், அது விருப்பத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இது தொடர்பான விரிவான அறிவிப்பை மனிதவள அமைச்சு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






