என் தமிழ்

‘ராமாயணா’ படத்திற்கு அமோக வரவேற்பு : வெளியீட்டுக்கு முன்பே ரூ.250 கோடிக்கு வியாபாரம்

08 ஜூலை 2026 : இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’, திரைக்கு வருவதற்கு முன்பே வணிக ரீதியாக புதிய சாதனையை படைத்து வருகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு விநியோக உரிமை சுமார் ரூ.250 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தகவல்களின்படி, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பத்தில் இந்தி விநியோக உரிமைக்கு ரூ.500 கோடி கோரியதாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய திரைப்பட வரலாற்றில் வெளியீட்டுக்கு முன்பே நடைபெற்ற மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Scroll to Top