கோலாலம்பூர், 08 ஜூலை 2026 : தேசிய பொருளாதார மன்றம் 2026 (National Economic Forum 2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது. மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மை, போட்டித்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மன்றத்தில், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மன்றத்தை தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் பேரவை (NCCIM) ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் பேரவை (MAICCI) ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்பை வகித்தது. ஏற்பாட்டுக் குழுத் தலைவராக டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜாவும், நிகழ்ச்சி இயக்குநராக விக்னேஸ்வரன் கோபாலும் செயல்பட்டனர்.
நிதி துணை அமைச்சர் லியூ சின் டோங் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய MAICCI மற்றும் NCCIM தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை மேம்படுத்த அரசு–தனியார் துறைகளின் வலுவான ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு முன்னுரிமைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
பெர்லிஸ் முதல் ஜோகூர் வரை உள்ள மாநில வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இணை அமைப்புகள் மன்றத்தில் பங்கேற்றிருந்தனர். மலேசிய இந்திய தொழில்துறை சமூகத்தின் ஒற்றுமை, தொழில் ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை இந்த மன்றம் வெளிப்படுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






