என் தமிழ்

மதானி வேலைவாய்ப்பு திருவிழா : AI திறனுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசு – அமைச்சர் ரமணன் தலைமையில்

செரம்பான், 08 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானில் நடைபெற்ற ‘லிண்டுங் கெர்ஜாயா மடானி’ (LINDUNG Kerjaya MADANI) வேலைவாய்ப்பு திருவிழாவில் கலந்து கொண்ட துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மக்களின் திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளில் மடானி அரசு தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம், 40 நிறுவனங்கள் வழங்கிய 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள், மாதம் 9,000 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கும் பணியிடங்களுடன் வேலை தேடுபவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின்போது, பெர்கேசோ (PERKESO) உருவாக்கிய MyFutureJobs AI+ திட்டத்தையும் ரமணன் ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். இந்த புதிய தளம், வேலை தேடுவதற்கு மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் மலேசிய தொழிலாளர்களின் போட்டித்திறனை உயர்த்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தரமான வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், மக்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் மடானி அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

நல்ல வேலை என்பது வருமானத்தை மட்டுமல்ல, மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை, பொருளாதார பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கும் அடித்தளமாகும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Scroll to Top