என் தமிழ்

செகாமாட்டில் SJKT லடாங் சுங்கை மூவார் பள்ளி இடமாற்றம் : குழந்தைகளின் கல்விக்கு மதானி அரசு முன்னுரிமை

செகாமாட், 04 ஜூலை 2026 : செகாமாட்டில் அமைந்துள்ள SJKT லடாங் சுங்கை மூவார் தமிழ்ப்பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு மதானி அரசு முன்னுரிமை அளித்து வருவதாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறையின் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் செகாமாட் பகுதிக்கு நேரில் சென்று, பள்ளி இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றதற்கு அவர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு குறைபாடுகள், உள்ளூர் மக்களிடமிருந்து பள்ளி தொலைவில் அமைந்திருப்பது மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், இப்பள்ளியை இடமாற்றம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக யுனேஸ்வரன் கூறினார்.

கல்வி அமைச்சரின் நேரடி வருகை, இவ்விவகாரத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதையும், பள்ளி இடமாற்றத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின்போது வழங்கப்பட்ட விளக்கத்தின்படி, தற்போது பள்ளி அமைக்கப்படவுள்ள புதிய நிலத்தின் உரிமை மாற்ற நடவடிக்கைகள், செகாமாட் நில மற்றும் சுரங்க அலுவலகத்தின் (PTG) ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன. செகாமாட் மாணவர்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் கற்றலுக்கு ஏற்ற சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்வதில் அக்கறை காட்டி வரும் மலேசிய கல்வி அமைச்சுக்கு யுனேஸ்வரன் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பள்ளி இடமாற்றப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், குழந்தைகளின் கல்விக்கு மதானி அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் மலேசிய கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள், மலேசிய துணைக் கல்வி இயக்குநர், ஜொகூர் மாநில கல்வி இயக்குநர் மற்றும் செகாமாட் மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Scroll to Top