கோலாலம்பூர், 03 ஜூலை 2026 : ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான FIABCI World Prix d’Excellence Awards விருது வழங்கும் விழாவில், மொத்தம் 14 விருதுகளை வென்று மலேசியா ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Champion) பட்டத்தை வென்றுள்ளது.
மலேசியா எட்டு தங்கப் பதக்கங்களையும், ஆறு வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றி, உலக ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சாதனை குறித்து வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் கூறுகையில், உலகத் தரத்திலான புதுமை, வடிவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் சமூக நலன் ஆகிய அம்சங்களில் மலேசியாவின் ரியல் எஸ்டேட் துறை சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்டது என்பதை இந்த வெற்றி நிரூபிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த அங்கீகாரம் மலேசியாவின் பெயரை உலக அரங்கில் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் சொத்து மேம்பாட்டாளர்களின் திறமையும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார். குறிப்பாக, வியட்நாமில் மலேசிய நிறுவனங்கள் உருவாக்கிய இரண்டு திட்டங்கள் தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றார்.
ரியல் எஸ்டேட் துறையின் “ஆஸ்கர் விருதுகள்” என்று போற்றப்படும் FIABCI World Prix d’Excellence Awards, கட்டிடக்கலை, புதுமை, சமூகப் பங்களிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படும் உலகின் உயரிய அங்கீகாரமாகும்.
இந்தச் சாதனையைப் படைத்த அனைத்து மலேசிய சொத்து மேம்பாட்டாளர்களுக்கும் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வாழ்த்து தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் தொழில்துறையினரின் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம், நிலைத்தன்மை, போட்டித்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சொத்து மேம்பாட்டை முன்னெடுத்து, மலேசியா மதானி நோக்கங்களை அடைய முடியும் என்பதற்கான சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்தது.






