என் தமிழ்

புலோ கசாப் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் யுனேஸ்வரன் : நோயாளிகள், முதியோருக்கு உதவிக்கரம்

ஜொகூர், 02 ஜூலை 2026 : ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஒற்றுமைத் துணை அமைச்சரும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ், புலோ கசாப் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோஸி ரஸித் உடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பல குடும்பங்களை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.

நுரையீரல் மற்றும் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது அப்துல் தாலிப் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த யுனேஸ்வரன், அவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். மேலும், குடும்பத்தின் வசதிக்காக வீட்டில் கழிப்பறை அமைக்க தேவையான உதவியையும் வழங்குவதாக உறுதியளித்தார். புயலால் வீட்டின் கூரை சேதமடைந்து தனியாக வசித்து வந்த முதியவர் மசானு மாட் டெலுவையும் சந்தித்த அவர், வீட்டின் கூரையைச் சீரமைக்க உதவுவதுடன் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.

அதேபோல், பக்கவாதத்தால் படுக்கையிலுள்ள முன்னாள் மீனவர் நொராஸ்ரி ஒத்மானையும் சந்தித்து, அவரது மருத்துவத் தேவைகளுக்காக நிதி உதவியுடன் இரண்டு பெரிய பால் டின்களையும் வழங்கினார். வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என வலியுறுத்திய யுனேஸ்வரன், புலோ கசாப் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் உறுதியுடன் ஹரப்பான் வேட்பாளர் ரோஸி ரஸித்துக்கு ஆதரவு வழங்குமாறும் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top