ஈரான். 27 ஜூன் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றத்தை மீண்டும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் தரப்பின் தகவலின்படி, ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமான சேமிப்பு தளங்கள் மற்றும் கடலோர ரேடார் அமைப்புகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அண்மையில் சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றஞ்சாட்டியதுடன், தேவையான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளது.
இந்த மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், சர்வதேச நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.






