புத்ராஜயா, 27 ஜூன் 2026 : 20-ஆவது ஆசியான் மூத்த சுகாதார அதிகாரிகள் (SOMHD) கூட்டத்தைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சகம் தலைமையில் பல முக்கிய ஆசியான் பிளஸ் சுகாதாரக் கூட்டங்கள் கலப்பு (நேரடி மற்றும் இணையவழி) முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இந்தத் தொடரில் 15-ஆவது ஆசியான் பிளஸ் த்ரீ (APT), 15-ஆவது ஆசியான்–சீனா, 5-ஆவது ஆசியான்–கொரியக் குடியரசு கூட்டங்கள் இடம்பெற்றதுடன், ஆசியான்–அமெரிக்கா மற்றும் ஆசியான்–ஜப்பான் மூத்த சுகாதார அதிகாரிகள் கூட்டங்கள் முதன்முறையாக நடைபெற்றன. இந்தக் கூட்டங்கள் மூலம் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உரையாடல் மற்றும் மேம்பாட்டுப் பங்காளிகளுக்கும் இடையேயான சுகாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றதாக மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2026 செப்டம்பர் 7 முதல் 11 வரை நடைபெறவுள்ள 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், ஆசியான் சுகாதார உத்திசார் செயல்திட்டம் (ASHA) மற்றும் 2026–2030 காலத்திற்கான ஆசியான் சுகாதாரப் பணித்திட்டம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளது. இந்த இரு ஆவணங்களும் அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளின் கூட்டு ஒப்புதலை ஏற்கனவே பெற்றுள்ளன.
இந்தக் கூட்டங்களுக்கு மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் தலைமை தாங்கினார். பொதுச் சுகாதாரப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி, மலேசியக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஆரோக்கியமான, சமத்துவமான மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஆசியான் சமூகத்தை உருவாக்குவதற்கான பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இந்தக் கூட்டங்கள் அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.






