புத்ராஜயா, 27 ஜூன் 2026 : மலேசியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையேயான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (DTAA) மறுபேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று, ஜூன் 22 முதல் 25 வரை புத்ராஜயாவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மலேசிய நிதி அமைச்சகமும், சுவிட்சர்லாந்தின் சர்வதேச நிதிக்கான மாநில செயலகமும் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை, 1974-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ள தற்போதைய இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை, தற்போதைய சர்வதேச வரி தரநிலைகள் மற்றும் மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம், ஒரே வருமானத்திற்கு இரு நாடுகளிலும் வரி விதிக்கப்படுவதைத் தடுப்பதுடன், வரி விதிப்பு உரிமைகளை தெளிவுபடுத்தி, வரித்துறை அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளையும், எல்லை தாண்டிய வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் முக்கிய கருவியாகவும் இது விளங்குகிறது.


டிசம்பர் 2025-இல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட ஆலோசனையில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சமநிலையான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதனிடையே, மலேசிய கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ யோஹான் மஹ்மூத் மெரிக்கன், மலேசிய மற்றும் சுவிஸ் பிரதிநிதிகளைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால வரி ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதில் மதானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.






