கோலாலம்பூர், 25 ஜூன் 2026 : மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) சார்பில்,சிறந்த சேவை விருது வழங்கும் விழா (APC) 2026 மற்றும் ஓய்வுபெற்றோருக்கான சிறப்பு பாராட்டு விழா ஜூன் 24 அன்று நடைபெற்றது. அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சிறப்பான சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அரசுத் துறை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் 642 பேருக்கு சிறந்த சேவை விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களில் அமைச்சின் கீழ் பணியாற்றும் 24 பணியாளர்கள், பாலியல் தொல்லை தீர்ப்பாயம் (TAGS) சார்பில் ஒருவர், மலேசிய சமூக நிறுவனம் (ISM) சார்பில் 6 பேர், பெண்கள் மேம்பாட்டு துறை (JPW) சார்பில் 18 பேர், மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) சார்பில் 73 பேர் மற்றும் சமூக நலத் துறை (JKM) சார்பில் 520 பேர் அடங்குகின்றனர்.



அதே விழாவில், நீண்டகால சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்ற 206 பேருக்கும் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவர்களின் சேவை காலத்தில் நாட்டுக்கும் அமைச்சுக்கும் அளித்த பங்களிப்புகள் பாராட்டப்பட்டன. அமைச்சு தெரிவித்ததாவது, 2025 ஆம் ஆண்டில் பல்வேறு சாதனைகள் அடையப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பின்னணியில் அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக இருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்த விருது விழா, அரசுத் துறையில் உயர்தர பணியாற்றும் கலாசாரத்தை ஊக்குவிப்பதோடு, மனிதநேயம் மற்றும் நேர்மை அடிப்படையிலான சேவை மனப்பான்மையை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









