என் தமிழ்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ‘Be My Eyes’ செயலி : அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிமுகம்

கோலாலம்பூர், 24 ஜூன் 2026 : மலேசியாவில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்தும் நோக்கில், “Global Accessibility Awareness Day” நிகழ்வுடன் இணைந்து “Be My Eyes Malaysia” செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள மலேசிய பார்வையற்றோர் சங்க (MAB) வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்துகொண்டு செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றமும் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். டிஜிட்டல் மாற்றம் என்பது வெறும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவது அல்லது முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல; மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் 7.36 இலட்சமாக இருந்த பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, 2026 மே மாத நிலவரப்படி 8.44 இலட்சமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்களில் 69,000-க்கும் மேற்பட்டோர் பார்வை மாற்றுத்திறனாளிகள் எனவும் அவர் கூறினார்.

“Be My Eyes” செயலி, பார்வை மாற்றுத்திறனாளிகள் பொருட்களை அடையாளம் காணவும், தகவல்களை வாசிக்கவும், புதிய இடங்களில் வழிசெலுத்தவும் மற்றும் பல்வேறு சேவைகளை சுயமாக அணுகவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் அவர்களின் தன்னம்பிக்கை, சுயநிறைவு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் டிஜிட்டல் வளர்ச்சித் திட்டங்களில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக இருப்பதாகக் கூறிய கோபிந்த் சிங் டியோ, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றுத்திறனாளிகளின் அன்றாட சவால்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என்றார்.

மேலும், “AI Untuk Rakyat” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவும் பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மலேசிய பார்வையற்றோர் சங்கம் மற்றும் பிற தரப்புகளுடன் இணைந்து, நாடு முழுவதும் டிஜிட்டல் அணுகலை மேலும் விரிவுபடுத்த அமைச்சகம் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நிகழ்வின் இறுதியில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும் என்றும், அதுவே அனைவரையும் உள்ளடக்கிய மலேசியாவை உருவாக்கும் அடித்தளமாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Scroll to Top