கோலாலம்பூர், 23 ஜூன் 2026 : பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் 149-வது கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்வது மற்றும் மலேசியாவின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் எல் நினோ பருவநிலை தாக்கத்தை சமாளிக்க நாட்டின் தயார்நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நீர் விநியோகம், வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, கடுமையான வெப்ப அலை மற்றும் ஆலங்கட்டி மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலனை மையமாகக் கொண்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கும் கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதேவேளையில், நாட்டின் பொருளாதாரப் போட்டித்திறனை உயர்த்துவது, தரமான முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் நலனை உறுதி செய்வது தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்தக் கூட்டத்தின் மூலம் கூட்டாட்சி அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்றும், நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.






