என் தமிழ்

யுனேஸ்வரன் ராமராஜ்: தேசிய ஒற்றுமை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கோலாலம்பூர், 23 ஜூன் 2026 : தேவான் ரக்யாத் கூட்டத்தொடரை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விளக்கக் கூட்டம் மற்றும் வாய்மொழிக் கேள்வி–பதில் அமர்வுக்கான தயாரிப்புகளில் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில், ‘ருகூன் நெகாரா’வின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் அரசின் முயற்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இன, மத மற்றும் கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி மக்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளன.

மேலும், தேவான் ரக்யாத்தில் எழுப்பப்படவுள்ள வாய்மொழிக் கேள்விகளுக்கு அமைச்சகத்தின் சார்பில் துல்லியமான பதில்களை வழங்குவதற்கான தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. தேசிய ஒற்றுமை தொடர்பான தற்போதைய திட்டங்கள், எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் அமைச்சகத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் ஜோகூரில் உள்ள காவாசான் ருகுன் தெத்தாங்கா (KRT) உறுப்பினர்களுடன் நடத்தவுள்ள நட்புறவு சந்திப்பு தொடர்பான தயாரிப்பு விளக்கக் கூட்டத்திலும் யுனேஸ்வரன் ராமராஜ் பங்கேற்றார். அதற்கு முன்னர், தேவான் ரக்யாத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, நடப்பு அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் கலந்துரையாடினார்.

Scroll to Top