என் தமிழ்

கண்ணதாசன் விழா 2026 : சான்றோர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி டத்தோ ஸ்ரீ சரவணன் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர், 22 ஜூன் 2026 : கவியரசர் கண்ணதாசனின் இலக்கியப் பாரம்பரியத்தையும் தமிழுக்கான அவரது பங்களிப்புகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் விழா 2026 கோலாலம்பூரிலுள்ள செட்டியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், MIC தேசியத் துணைத் தலைவரும், கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் நிகழ்வுக்கு தலைமை தாங்கி, “கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு நோக்கிய பயணம்” என்ற நிகழ்வை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் சீராளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், எழுத்தாளர் பாரதி பாஸ்கர், செந்தமிழ்ச்சுடர் கி. சிவக்குமார், கரு. கார்த்திக் மற்றும் கவிஞர் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ் வாணி கருணாநிதி தொகுத்து வழங்கினார்.

விழாவில், “கண்ணதாசன் தந்த தரிசனங்கள்” என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரும், “சிறகுகள் தந்தவன்” என்ற தலைப்பில் கி. சிவக்குமாரும் உரையாற்றி, கண்ணதாசனின் படைப்புகளின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, “கவியரசர் கண்ணதாசன் படைப்புகளில் ஓங்கி நிற்பது காதலே, தத்துவமே, அனுபவமே” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நடுவராகப் பொறுப்பேற்றார்.

பட்டிமன்றத்தில் காதல் அணியில் புதுகை பாரதி மற்றும் கோ. சு. சிம்மாஞ்சனா, தத்துவம் அணியில் வழக்கறிஞர் சுமதி மற்றும் முனைவர் தேவி குணசேகரன், அனுபவம் அணியில் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் இசைவாணி இந்திரா விஜயலட்சுமி ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, தமிழ் மொழி, இலக்கியம், கல்வி மற்றும் சமூக சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஐந்து ஆளுமைகளுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சாதனைத் தலைவர் துன் ச. சாமிவேலு விருது பேராசிரியர் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரனுக்கும், மக்கள் தலைவர் தான் ஸ்ரீ சுப்ரமணியம் விருது முனைவர் க. திலகவதிக்கும் வழங்கப்பட்டது.

அதேவேளை, தமிழ்வேள் கோ. சாரங்கபாணி விருது திருவாளர் சி. சிவப்பிரகாசத்துக்கும், தமிழ்க் காவலர் முருகு சுப்ரமணியம் விருது டத்தோ டாக்டர் வ. கதிரேசனுக்கும், இறையருள் கவிஞர் சீனி நைனா முகம்மது விருது திருமதி ஹவா நாச்சியா, PJK அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கண்ணதாசனின் கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிந்தனைகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், இலக்கிய ஆர்வலர்கள், சமூகப் பிரமுகர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். கண்ணதாசனின் நூற்றாண்டை முன்னிட்டு எதிர்காலத்தில் பல்வேறு இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான தொடக்கமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

Scroll to Top