என் தமிழ்

அடுத்த தலைமுறைக்கு தூய தமிழ்ப் பெயர்களை கொண்டு செல்லும் ‘tamilname.com’ செயலி அறிமுகம் : டத்தோ ஸ்ரீ சரவணன் துவங்கி வைத்தார்

22 ஜூன் 2026 : அடுத்த தலைமுறையினருக்கு தூய தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்தி, தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட tamilname.com’ செயலி மற்றும் இணையதளம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுக நிகழ்வை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையேற்று துவங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் தமிழ்மொழியின் தூய்மையையும் அதன் பண்பாட்டு அடையாளத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமானதாகும் என்று தெரிவித்தார். மேலும், சுமார் 5,000 ஆண்டுகால தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தை நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இணைக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்மொழியைக் காப்பதும், அதன் செழுமையையும் தூய்மையையும் பேணுவதும் ஒவ்வொரு தமிழரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்று வலியுறுத்திய டாக்டர் சரவணன், இத்தகைய டிஜிட்டல் முயற்சிகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் இந்த செயலி மற்றும் இணையதளம், தமிழர் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Scroll to Top