என் தமிழ்

டீப்ஃபேக், அடையாள மோசடி உள்ளிட்ட தவறான AI பயன்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

கோலாலம்பூர், 22 ஜூன் 2026 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு நிர்வாக (AI Governance) சட்ட மசோதா, டீப்ஃபேக் (Deepfake), அடையாள ஆள்மாறாட்டம் மற்றும் அனுமதியின்றி தனிப்பட்ட நெருக்கமான உள்ளடக்கங்களைப் பரப்புதல் போன்ற பிரச்சினைகளை முறையாக கையாளும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கிளுவாங் தொகுதி உறுப்பினர் வோங் ஷூ கீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிஜிட்டல் அமைச்சகம், AI தொடர்பான குற்றச்செயல்கள், விசாரணைகள், அமலாக்கம் மற்றும் வழக்குத் தொடர்வது போன்ற அம்சங்கள் 2026 இணையக் குற்றவியல் சட்ட மசோதா (Cyber Crime Bill 2026) மூலம் தெளிவாக கையாளப்படும் என கூறியது.

அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, AI நிர்வாக சட்ட மசோதா, AI அமைப்புகளின் முழு செயல்முறை வாழ்க்கைச் சுழற்சியையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, பிரச்சினைக்குரிய உள்ளடக்கங்கள் உருவான பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தரவு நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, அபாய மதிப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அம்சங்கள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே அபாயங்களைத் தடுக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த சட்டம், AI அமைப்புகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் தரப்பினர், தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் உருவாக்குதல், பரப்புதல், அணுகுதல் அல்லது வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் 2017 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (Act 792) கீழ் விசாரிக்கப்படும்.

மேலும், 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் (Act 866) மற்றும் 1998 தொடர்பாடல் மற்றும் பல்லூடகச் சட்டம் (Act 588) ஆகியவை, இணைய சேவைகள் வழியாக பரவக்கூடிய தீங்கிழைக்கும் அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகின்றன.

AI தவறான பயன்பாடுகளை எதிர்கொள்ள, தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பதோடு, புதிய AI நிர்வாக சட்டத்தின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் இரட்டை அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பயன்பாடும் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அது வலியுறுத்தியது.

Scroll to Top