செரம்பான், 21 ஜூன் 2026 : உலக நாடுகளின் மத்தியில் மலேசியாவுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாட்டின் நடைமுறை சார்ந்த வெளியுறவுக் கொள்கையும், பல்வேறு நாடுகளுடன் பேணப்படும் மூலோபாய ஒத்துழைப்புமே இதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.
செரம்பானில் நடைபெற்ற Pertubuhan Lima Generasi Malaysia (P-L-G) அமைப்பின் விருந்துபசார நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பல்வேறு நாடுகளுடன் மலேசியா பேணி வரும் நல்லுறவு, உலக அரங்கில் நம்பகமான கூட்டாளி என்ற நாட்டின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மலேசியாவுக்கு உலகத் தலைவர்கள் அளிக்கும் மரியாதை, புதிய முதலீடுகள், வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார். அண்மைய வெளிநாட்டு பயணங்களின் போது, உஸ்பெகிஸ்தான் அதிபர் தமக்காக விமான நிலையத்திலேயே காத்திருந்து இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்ட சம்பவத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் தொடர்ந்து மாறிவரும் நிலையில், மலேசியா சர்வதேச அரங்கில் தனது மதிப்பையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ள வலுவான வெளியுறவு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.






