செரம்பான், 14 ஜூன் 2026 : IRC நெகிரி செம்பிலான் கிளப் ஏற்பாடு செய்த 14-வது IRC Negeri Sembilan International Football Carnival 2026 சர்வதேச மூத்தோர் 7-பக்க கால்பந்து போட்டி, பந்தர் ஸ்ரீ செண்டாயனில் உள்ள அரினா ஐஆர்சியில் உற்சாகமாகத் தொடங்கியது.
இந்தப் போட்டியில் மலேசியா, இந்தியா, மாலத்தீவுகள், இந்தோனேசியா, தாய்லாந்து, புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 58 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த முன்னாள் மனிதவள அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கால்பந்து என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் சக்திவாய்ந்த விளையாட்டு எனக் குறிப்பிட்டார்.
“மூத்த வீரர்கள் தொடர்ந்து விளையாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் திகழ்கின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதில் விளையாட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போட்டி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, விளையாட்டு மூலமாக சர்வதேச நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஐஆர்சி நெகிரி செம்பிலான் கிளப்பின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தன்னார்வலர்களுக்கும் டத்தோ ஸ்ரீ சரவணன் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







