கோலாலம்பூர், 14 ஜூன் 2026 : அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஜப்பான் பயணம், மலேசியா மற்றும் ஜப்பான் இடையிலான உறவு மேலும் விரிவடைந்து, ஆழமான மற்றும் மூலோபாய கூட்டாண்மையாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளதாக மலேசியாவிற்கான ஜப்பான் தூதர் நொரியுகி ஷிகாத்தா தெரிவித்தார்.
கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகம் (UM) ஏற்பாடு செய்த ஹனாபி தைகாய் 2026 ஜப்பானிய கலாசார விழாவில் உரையாற்றிய அவர், ஜப்பான் பயணத்தின் போது அன்வார் இப்ராகிம் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு வழங்கிய முதல் மலேசியத் தலைவராகவும், நிக்கேய் மன்றத்தில் முக்கிய உரையாற்றியவராகவும் வரலாறு படைத்தார் என்றார்.
இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு தற்போது கல்வி, வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு (AI), படைப்பாற்றல் தொழில்துறை மற்றும் அனிமே (Anime) போன்ற புதிய துறைகளுக்கும் விரிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் “கிழக்கை நோக்கு கொள்கை” (Look East Policy) அமல்படுத்தப்பட்டதிலிருந்து, கல்வித்துறை இருநாடுகளின் உறவின் முக்கிய அடித்தளமாக இருந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் ஜப்பானில் கல்வி மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான்காவது ஆண்டாக நடைபெறும் ஹனாபி தைகாய் விழா, ஜப்பானின் பாரம்பரிய கலாசாரம், கலை நிகழ்ச்சிகள், இசை, உணவு, அனிமே, மங்கா மற்றும் விழாக்கால மரபுகளை அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. இது மலேசியா – ஜப்பான் மக்களிடையேயான புரிந்துணர்வையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் கலாசார பரிமாற்ற மேடையாக அமைந்துள்ளதாக ஷிகாத்தா தெரிவித்தார்.
மேலும், மலாயா பல்கலைக்கழகம் ஜப்பான் தொடர்பான கல்வி திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் இருநாடுகளின் கல்வி உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் பாராட்டினார்.






