டெஹ்ரான், 13 ஜூன் 2026 : ஓமான் கடற்கரைக்கு அருகே வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை “ஆயுதக் கொள்ளை” மற்றும் “அரச ஆதரவு கடற்கொள்ளை” என வர்ணித்துள்ள ஈரான், சர்வதேச சமூகத்தினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்களை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கும் கடல்சார் பாதுகாப்பு விதிகளுக்கும் எதிரானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமான் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த MT Settebello என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த மற்ற 21 இந்திய பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்க அரசிடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.






