சென்னை, 06 ஜூன் 2026 : நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், படத்தைத் தயாரித்துள்ள KVN Productions நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் பெறப்பட்ட முன்பணத்தை வட்டியுடன் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளது.
முதலில் 2026 ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் காரணமாக இதுவரை திரையரங்குகளை எட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விநியோகஸ்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் பெறப்பட்ட தொகையைத் திருப்பி வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் வணிகத் தலைவர் மோகன் சுப்ரீத் தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தகவலின்படி, இந்த முடிவு விஜயின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தணிக்கை அனுமதி கிடைத்த பின்னர், படத்தை தயாரிப்பு நிறுவனமே நேரடியாக வெளியிடும் திட்டத்தையும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், விஜயின் அரசியல் பயணத்திற்கு முன்பான கடைசி திரைப்படமாக கருதப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






