06 ஜூன் 2026 : நைஜரின் வடக்கு பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில் லாரி பழுதடைந்து நடுவழியில் சிக்கியதால், தண்ணீர் கிடைக்காமல் 49 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலியில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நைஜர் நாட்டைச் சேர்ந்த பயணிகள் சென்ற லாரி, நைஜர்–அல்ஜீரியா எல்லைக்கு அருகிலுள்ள அசமாக்கா (Assamaka) பகுதியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பழுதடைந்து நின்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனத்தை சரிசெய்ய ஓட்டுநரும் பயணிகளும் பலமுறை முயன்ற போதிலும் அது முடியவில்லை. இதனால் பாலைவனத்தின் கடுமையான வெப்பத்திலும், குடிநீர் பற்றாக்குறையிலும் சிக்கிய பயணிகள் பல நாட்கள் தவித்துள்ளனர். இறுதியில் தாகம் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தால் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் இருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் 50 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நடந்து சென்று நீராதாரத்தை அடைந்ததுடன், பின்னர் அசமாக்கா நகரை அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னரே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
மீட்புக் குழுவினர் சென்றபோது, லாரியின் அருகிலும் அதன் அடிப்பகுதியிலும் பல உடல்கள் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 49 பேரின் உடல்களும் அப்பகுதியிலேயே பொதுப் புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.
சகாரா பாலைவனப் பகுதி, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிப்பவர்களின் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. கடுமையான வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தொலைதூரப் பகுதிகள் காரணமாக இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.






