என் தமிழ்

2,700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் AT&S மலேசியா : பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர், 05 ஜூன் 2026 : உலகளாவிய அரைக்கடத்தி மற்றும் உயர்தர மின்னணு உற்பத்தித் துறையில் மலேசியா தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்து வருவதாகவும், இது சர்வதேச முதலீட்டாளர்களின் உறுதியான நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

04/06/2026 மாலை, ஆஸ்திரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான AT&S (Austria Technologie & Systemtechnik Aktiengesellschaft) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மைக்கேல் மெர்டின் தலைமையிலான உயர்மட்ட குழுவினரை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளவில் உயர்தர ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated Circuit – IC) சப்ஸ்ட்ரேட் மற்றும் அச்சிடப்பட்ட மின்சுற்று பலகைகள் (Printed Circuit Boards) உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் AT&S, செயற்கை நுண்ணறிவு (AI), மொபைல் சாதனங்கள், வாகனத் தொழில், விண்வெளி, மருத்துவம், தொழில்துறை மற்றும் உயர் செயல்திறன் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளுக்கான மேம்பட்ட இணைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

இந்த சந்திப்பின் போது, கெடா மாநிலம் குலிமில் செயல்பட்டு வரும் AT&S மலேசியா நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். தற்போது அந்நிறுவனம் சுமார் 2,700 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரியா, சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியாவை தனது முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக AT&S நிறுவனம் தேர்வு செய்திருப்பது, நாட்டின் தொழில்துறை திறன் மற்றும் போட்டித்திறன் மீதான உலக முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், உலகளாவிய அரைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் மலேசியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் உயர்தர முதலீடுகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து தெளிவான மற்றும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இத்தகைய முதலீடுகள் நாட்டில் உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

AT&S போன்ற சர்வதேச நிறுவனங்கள் மலேசியாவில் தொடர்ந்து முதலீடு செய்வது, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொறுப்பான பொருளாதார நிர்வாகம் மற்றும் மதானி அரசாங்கத்தின் தெளிவான கொள்கைகள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

Scroll to Top