என் தமிழ்

இளைஞர்கள் கைகோர்க்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சி : ராகான் பூமி 2026

போர்ட் டிக்சன், 05 ஜூன் 2026 : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுத்தமான, பசுமையான மற்றும் நிலையான பூமியை உருவாக்கும் நோக்கில் “ராகான் பூமி 2026” (Program Rakan Bumi 2026) எனும் சிறப்பு சுற்றுச்சூழல் நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலம், போர்ட் டிக்சனில் நடைபெறவுள்ளது.

மலேசிய தமிழ் இளைஞர் பெல் கிளப்புகள் மன்றம் (Majlis Kelab Bell Belia Tamil Malaysia), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (KBS) மற்றும் மலேசிய இளைஞர் மன்றம் (MBM) ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

போர்ட் டிக்சனில் உள்ள பாகான் பினாங், பத்து 4 கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், கடற்கரை சுத்தப்படுத்தும் பணி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தனித்தனியாகப் பிரித்துச் சேகரிக்கும் நடவடிக்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு விளக்கக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.

மேலும், பங்கேற்பாளர்களுக்கு இலகுரக விருந்தும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“இயற்கையால் ஊக்கமளிக்கப்பட்டு, காலநிலைக்காகவும், நமது எதிர்காலத்திற்காகவும்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இளம் தலைமுறையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணி பங்காற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எதிர்கால சந்ததியினருக்காக இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதையும், சமூக ஒத்துழைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதையும் இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top