கோலாலம்பூர், 04 ஜூன் 2026 : கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புத் திட்டம் (ECRL) என்பது வெறும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் இரயில் திட்டம் மட்டுமல்ல, மாறாக நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய தேசிய உள்கட்டமைப்பு திட்டமாகும் என்று மலேசிய அரசுப் பணித் தலைமைச் செயலாளர் தன் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி பின் அபு பக்கார் தெரிவித்துள்ளார்.
மலேசியா ரெயில் லிங்க் செண்டிரியான் பெர்ஹாட் (Malaysia Rail Link Sdn. Bhd.) நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ECRL 2026 மொபைல் கண்காட்சி வாகனத்தின் (Trak Pameran Bergerak ECRL 2026) தொடக்க விழாவை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த முயற்சி, ECRL திட்டம் தொடர்பான தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதுடன், அதன் முக்கியத்துவம் மற்றும் நீண்டகால பயன்கள் குறித்த புரிதலை மேம்படுத்தும் மக்கள் தொடர்பு தளமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே மாத நிலவரப்படி ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகள் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இது, நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான ECRL திட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக முன்னேறி வருவதை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய வளர்ச்சிக்கான இந்த மூலோபாயத் திட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
கிழக்குக் கடற்கரை மற்றும் மேற்குக் கடற்கரை பகுதிகளை நவீன இரயில் இணைப்பின் மூலம் ஒருங்கிணைக்கும் ECRL திட்டம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மலேசியாவின் உயர்தர செயல்திறன் கொண்ட அரசுப் பணித் திட்டங்களின் வெற்றிகரமான முன்னுதாரணமாகவும் அமையும் என்று டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி பின் அபு பக்கார் தெரிவித்தார்.








