பந்திங், 03 ஜூன் 2026 : சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பாராயுடு வீரமன், சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு (EXCO) கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, பந்திங் சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, பந்திங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கான நிதியுதவி காசோலைகளையும் அவர் வழங்கினார்.
மக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரடியாகக் கேட்டு அறியும் வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமைந்ததாக பாப்பாராயுடு வீரமன் தெரிவித்தார். பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு கவனிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தொகுதியின் வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தன்னுடன் இணைந்து செயல்பட்டு, பந்திங் தொகுதியை மேலும் முன்னேற்றமிக்க மற்றும் வளமான பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பங்களித்து வரும் அனைத்து சமூகத் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாப்பாராயுடு வீரமன் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“மக்களின் குரலைக் கேட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்களின் முதன்மைப் பொறுப்பு. ஒற்றுமையான ஒத்துழைப்பின் மூலம் பந்திங் தொகுதியை மேலும் சிறப்பான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.













