என் தமிழ்

பட்ஜெட் சிக்கன நடவடிக்கைகளால் கல்வித் திட்டங்கள் பாதிக்கப்படாது: கல்வி அமைச்சர்

கோலாலம்பூர், 03 ஜூன் 2026 : அரசாங்கம் மேற்கொண்டு வரும் பட்ஜெட் சிக்கன நடவடிக்கைகள், மலேசிய கல்வி அமைச்சகத்தின் (KPM) முக்கிய திட்டங்கள் மற்றும் கல்வி கொள்கைகளின் அமலாக்கத்தை பாதிக்காது என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்துள்ளார்.

கல்வித் தரத்தைப் பாதுகாப்பதற்காக மாணவர்களின் நலன் மற்றும் தரமான கற்றல் சூழலை உருவாக்குவது அமைச்சகத்தின் முதன்மை முன்னுரிமையாக தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பழுதடைந்த பள்ளிகளின் பராமரிப்பு பணிகள், பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் அறைகள் புதுப்பிக்கும் திட்டங்கள் வழக்கம்போல தொடரும் என அவர் கூறினார். மேலும், மாணவர் நெரிசல் அதிகமாக உள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளும் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக நூலகவியல், மொழிபெயர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (LiTr.AI 2026) மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய பொருளாதார சூழலில் சிக்கன நடவடிக்கைகள் அவசியமானவை என்றாலும், கல்வித் துறையின் முக்கிய தேவைகள் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படமாட்டாது என வலியுறுத்தினார்.

இதனிடையே, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் அறைகள் மேம்படுத்தும் திட்டமும் தொடரும் என்றும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கான புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக பொருளாதார அழுத்தங்கள் காரணமாக எதிர்கால பட்ஜெட்டுகளில் சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்படலாம் என்று பிரதமர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், கல்வித் துறையின் முக்கிய திட்டங்கள் தடையின்றி தொடரும் என்ற கல்வி அமைச்சரின் உறுதிமொழி பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.

Scroll to Top