குவாந்தான், 02 ஜூன் 2026 : பஹாங் மாநிலத்தின் அரச குடும்ப உறுப்பினரான டத்தோ இந்தேரா புத்தேரி முனாவாரா சியாம்மியா பிந்தி டத்தோ முனீரின் கதாம் அல்-குர்ஆன் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், பஹாங் தெங்கு அம்புவான் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா பிந்தி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் அல்-ஹாஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
டத்தோ இந்தேரா புத்தேரி முனாவாரா சியாம்மியா, பஹாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த தெங்கு புத்தேரி செரி தேஜா மற்றும் புவான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ சேத்தியா ஹாஜா தெங்கு முஹைனி பிந்தி அல்மர்ஹூம் சுல்தான் ஹாஜி அகமது ஷா ஆகியோரின் மகளாவார்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் துங்கு அம்புவான் பெசார் துவான்கு ஐஸ்யா ரோஹானி பிந்தி அல்மர்ஹூம் தெங்கு பெசார் மஹ்மூத் அவர்களும் விழாவில் கலந்து கொண்டதாக பஹாங் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்த கதாம் அல்-குர்ஆன் விழா, திருக்குர்ஆனை முழுமையாக ஓதி நிறைவு செய்வதைக் குறிக்கும் ஆன்மீக நிகழ்வாகும். இவ்விழா அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில் மதச்சார்ந்த சடங்குகளுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, இஸ்லாமிய கல்வி மற்றும் சமய விழுமியங்களை இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.






